வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சள் உற்பத்தி அதிகரித்திருந்தும் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாங்கனி. அதனைத் தொடர்ந்து கரும்பு , மரவள்ளி, மஞ்சள்சாகுபடி அதிகமாக உள்ளது. வாழப்பாடி , பெத்தநாயக்கன்பாளையம் , ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பில் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் மூட்டை சுமார் 15,000 வரை விற்கப்பட்டதால் , இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.
குறிப்பாக வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள பேளூர் , தும்பல், செக்கிடிப்பட்டி , சேசன்சாவடி, சிங்கிபுரம், பனைமடல், திருமனூர் ,மாரியம்மன் புதூர் ஆகிய கிராமங்களில் பெருமளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்தனர். அவர்களின் உழைப்புக்கு ஏற்ப மஞ்சள் உற்பத்தியும் இந்த ஆண்டு அதிக அளவில் கிடைத்தது.
ஆனால் அதற்கு ஏற்ப சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்தாண்டு 100 கிலோ எடை கொண்ட முட்டை 13 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 6000 முதல் 7500 ரூபாய் வரை மட்டுமே மஞ்சள் வியாபாரிகள், விலையை நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி, வேதனை அடைந்துள்ளனர். மஞ்சள் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க, தமிழக அரசு , மஞ்சளுக்கு என தனி விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மஞ்சள் சாகுபடி அதிகம் உள்ள இடங்களில் கூட்டுறவு விற்பனை சந்தைகளை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.