`வேட்டைக்காரர்கள் இப்படித்தான் பாறு கழுகுகளை கொல்கிறார்கள்' பாறு கழுகுகளின் பாவக் கதை!

சென்ற பகுதியில் காட்டைக் காக்கும் மிக முக்கியமான தூய்மைப் பணியாளர் கழுதைப்புலிகளைப் பற்றி அறிந்து கொண்டோம்! இப்போது நாம் காடு காக்கும் இரண்டாவது முக்கிய நபரை அறிந்து கொள்வோம்.

பாறு கழுகுகள்(Vultures), இவற்றைப் பற்றி தவறான புரிதல் நம் மக்களுக்கு எப்போதும் உண்டு. காரணம் அதன் மற்றொரு பெயர் “பிணம் தின்னி கழுகு”. ஆனால் காடுகள் செழிக்க அங்குள்ள உயிரினங்கள் வாழ இந்தப் பாறு கழுகுகளின் சேவை மகத்தானது.

பாறு கழுகுகள்

தான்சானியாவில் 8 வகையான பாறு கழுகுகள் உள்ளன. பாறு கழுகுகள் இறக்கையை விரித்தால் அவை 3 மீட்டர் நீளம் இருக்கும். இதனால் இவை இறக்கையை அடிக்காமல் நீண்ட நேரம் பறக்கும் தன்மை கொண்டவை. இதன் பார்வைத்திறன் ஒப்பிட முடியாதது. இதன் கண்களில் இரண்டு லென்ஸுகள் இருக்கும்.

ஒன்று எங்காவது இரை தென்படுகிறதா என்பதைத் தேடி அலையும். இரண்டாவது லென்ஸ் இரை தென்பட்டவுடன் அதை பெரிதாக்கிப் பார்த்து (ZOOM) உறுதிப்படுத்திக் கொள்ளும்.

இந்தப் பார்வைத்திறன் மனிதனுக்கு இருந்தால் தினசரி பேப்பரில் உள்ள தலைப்புச் செய்திகளை நாம் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே படிக்க முடியும்! இந்த ஒரு காரணத்திற்காகவே வேட்டையாடப்பட்டு நாட்டு மருந்துகளில் சேர்க்கப்பட்டு பாறு கழுகுகளின் தலைகள் விற்கப்படுகின்றன! இவற்றைச் சாப்பிடுவதால் நன்கு பார்வை தெரியும் என்ற மூட நம்பிக்கை மனிதனுக்கு உள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் வேட்டைக்காரர்கள் யானை, காண்டாமிருகம் போன்றவற்றை வேட்டையாடும்போது, அடுத்த சில நிமிடங்களில் பாறு கழுகுகள் கூட்டமாக அங்கு வந்து சேரும். இது வேட்டைக்காரர்களை அங்குள்ள வன அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. எனவே அவர்கள் விலங்குகளை வேட்டையாடி முடித்ததும் அதன் இறைச்சியில் விஷம் வைத்து, பாறு கழுகுகளைக் கொன்று விடுகிறார்கள். இவ்வாறு கலக்கப்படும் விஷம் (ஒரு விலங்கு மரணத்தின்போது) குறைந்தது 100 பாறு கழுகுகளைக் கொன்றுவிடும்.

கூட்டமாக பாறு கழுகுகள்

வானத்தில் பறந்து வேட்டையைக் காட்டிக் கொடுப்பதால் பாறு கழுகு துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்படுகிறது. இதன் இனப்பெருக்கம் சற்று மெதுவானது. ஓரிரண்டு வருடங்களுக்கு, ஒரு முட்டைதான் இடும். இந்தக் காரணங்களினால் ஆப்பிரிக்க காடுகளில் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இயற்கையாக அல்லது செயற்கையாக இறந்த விலங்குகளின் உடல்களைப் பாறு கழுகுகள் உணவாக்கி காடுகளில் நோய் பரவாமல் தடுக்கின்றன. ஆந்த்ராக்ஸ் மற்றும் ரேபிஸ் போன்ற கொள்ளை நோய்கள் காடுகளில் பரவும்போது, விலங்குகள் நீண்ட எண்ணிக்கையில் செத்து மடியும். அவற்றை உணவாக்கி மேலும் வியாதி பரவாமல் தடுக்கின்றன பாறு கழுகுகள்.

இதன் வயிற்றுப் பகுதிக்கு மேலுள்ள பையில், உணவை வேகமாக உண்டு சேமித்து வைத்துக்கொள்ளும் (1.5 கிலோ மாமிசத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும்) பின்னர் அதன் வயிற்றில் சுரக்கும் அபரிதமான அமிலத்தால் மாமிசத்தில் உள்ள கிருமிகளும், எலும்புகளும் மற்ற பகுதிகளும் செரிக்கப்பட்டு விடும். விலங்குகளின் பிரமாண்ட பேரணி நடக்கும்போது, சோர்வு, நோய், காயம்படுதல் மற்றும் தாகம், இவற்றால் இயற்கையாக இறக்கின்றன காட்டு மாடுகள். கழுதைப் புலிகள், நரிகள் போன்ற விலங்குகள் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் வலம்வந்து அவற்றைச் சாப்பிடும். ஆனால் பாறு கழுகுகளுக்கு எல்லை கிடையாது. காடு முழுவதும் வலம் வந்து துப்புரவு செய்து கொண்டே இருக்கும்.

இந்தக் காட்டு மாடுகளின் தோல் கடினமாக இருக்கும். அதனால் இவற்றைச் சிறு விலங்குகள் கிழித்துச் சாப்பிட முடியாது. பாறு கழுகுகள் அங்கு வந்து அறுவை சிகிச்சை நிபுணர் போல் தன்னுடைய கூர்மையான வாயால் தோல் கிழித்து, தானும் உண்டு பிற விலங்குகளுக்கும் உணவளிக்கின்றன.

நன்கு வளர்ந்த ஒரு வரிக்குதிரையை மூக்கு முதல் வால் வரை சாப்பிட பாறு கழுகு கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் போதுமானவை.

இந்தியப் பாறு கழுகுகள்

சற்று நமது இந்தியாவையும் பார்ப்போம்!

இந்தியாவில் மூன்று வகை பாறு கழுகுகள் உண்டு. கடந்த 15 வருடங்களில் இதன் எண்ணிக்கையில் 96% அழிந்துவிட்டது.

நமது நாட்டில் வாழும் பார்சி இன மக்கள், தாங்கள் இறந்த பின் உடல்களை இவற்றுக்கு உணவாகத் தருகின்றனர். இதனால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும் என்பது அவர்களின் நம்பிக்கை (ஆப்பிரிக்க மசாய் மக்களைப் போல). ஆனால் பாறு கழுகுகள் அழிவுக்குப் பின்னர் பார்சியின் உடல்கள் கேட்பாரற்றுத் கிடந்தன. அதன் பின்னர்தான் காரணத்தைத் தேடியது இந்தியா. ஆனால் இந்தியாவில் இதன் அழிவுக்கானக் காரணம் வேறுவிதமானது.

முதல் காரணம், மாடுகளுக்கு வலி நிவாரணியான DICLOFENAC SODIUM என்ற ஆங்கிலமருந்து தரப்படுகிறது. பாறு கழுகுகள் இறந்த மாடுகளை  இரையாக உண்ணும்போது இந்த மருந்தால் அதன் கிட்னி செயல் இழந்து, இறந்து, இந்த இனம் அழிந்து போயின.

இரண்டாவது காரணம் அதிக கால்நடைகள் கொண்ட இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. எனவே இறந்து தூக்கி வீசப்படும் மாடுகளால் அவற்றை உண்ணும் தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேலும் தெருநாய்களைக் கொல்ல இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. அதனால் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதனால் பாறு கழுகுகளுக்குப் போதுமான இரை கிடைக்கவில்லை.

பாறு கழுகு

மூன்றாவது காரணம் மக்கள்தொகைப் பெருக்கமும் இவற்றிற்கு வாழ இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஒரு காலத்தில் சென்னையில் மட்டுமே அன்றைய மக்கள் தொகைக்கு இணையான எண்ணிக்கையில் இவை  இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவான பாறு கழுகுகள் மட்டுமே வாழ்கின்றன. கோவையில் உள்ள “அருளகம்” பாரதிதாசன் போன்றோர் இவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றனர்.

இருப்பினும் செயற்கை முறையில் இவற்றை இனப்பெருக்கம் செய்ய ( சிங்கப்பூர் மாதிரி நாடுகளில் உள்ளது) நமது தமிழக அரசு முயற்சி எடுத்தால் காடுகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.

பாறு  கழுகுகளைப் பற்றி சொல்லும் போது ஆப்பிரிக்க காட்டில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். பாறு கழுகுகள்  எங்கு வேட்டை நடக்கிறது என்பதை வானில் இருந்தே வட்டமிட்டு தேடிக் கொண்டே இருக்கும்.

வேட்டை விலங்குகள் இரை விலங்குகளைக் குறி வைக்க தொடங்கும் போதே பாறு கழுகுகள் வந்துவிடும். சொல்லப்போனால் வேட்டை விலங்குகளுக்குப் பசி எடுத்தால் இந்த கழுகுகளுக்குக் கொண்டாட்டம்தான்.

பாறு கழுகுகள்  மொத்தமாக ஓரிடத்தில் பறந்து கொண்டிருந்தால் அங்கு வேட்டை நடைபெறுகிறது அல்லது நடைபெற்று முடிந்து விட்டது என அறிந்து காட்டில் விலங்குகளைப் பார்க்க அலைந்து கொண்டிருக்கும் சுற்றுலா வாகனங்கள் அதை நோக்கி செல்லும்.

அந்த இடத்தில் பல வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். நாங்கள் ஒரு முறை பாறு கழுகுகள்  மொத்தமாக பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து அங்கு சென்றோம்.

வேட்டை

அங்கு  ஒரு சிவிங்கிப் புலியின் வேட்டை ஆரம்பமாகி இருந்தது.  ஒரு அரை வடிவத்தில்  15 -க்கும்  மேற்பட்ட வண்டிகள் அழகாக ஒழுங்குடன் நின்று வேட்டையைக் கவனித்துக் கொண்டிருந்தன. நாங்களும் எங்கள் வாகனத்தை அந்த வரிசையில் இணைத்துக் கொண்டோம்.

சிவிங்கிப் புலி, மானை வேட்டையாட 200 மீட்டர் அளவுக்கு  ஓட, மான் தப்பிவிட்டது. மீண்டும் முயற்சி, மான் ஓட்டம், இது மாதிரி 4, 5 முறை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. வாகனங்கள் அனைத்தும் அரை வட்ட வடிவத்தில் அதை சீரான இடைவெளியில் பார்த்துக் கொண்டே வேட்டைக்குத் தொந்தரவு தராத வகையில் அழகான சுய கட்டுப்பாடுடன் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தொடர்ந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு வண்டி பார்வையாளரின் வற்புறுத்தலுக்கு இணங்க இந்த வரிசையில் நிற்காமல் நேராக வேட்டை நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் சென்று விட்டார்.

இது அந்த வேட்டைக்கு இடைஞ்சல் தரும் என்பதை உணர்ந்து கொண்ட இந்த 15க்கு மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் மொத்தமாக வாக்கி டாக்கியில் சத்தம் போட, அவர் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்.

அதன் பின் முறையான வரிசையுடன் அழகாக பின் தொடர்ந்தது அந்த அணிவகுப்பு, 7வது முயற்சியில் மானை வீழ்த்தி இரையாக்கிக் கொண்டதை நேரில் பார்த்தோம்.

கூடாரம்

விலங்குகளின் வேட்டை முயற்சி உடனே பலன் தராது அடுத்தடுத்த முயற்சி இரையை தன் வசப்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்ட தருணம் அது. வேட்டைக்குத் தொந்தரவு தராமல் சுய கட்டுப்பாட்டுடன் அழகாக நடந்த மறக்க முடியாத ஒரு நிகழ்வு இது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் தரையில் எங்களது வாகனம் ஊர்வலம் சென்ற மாதிரி வானத்தில் பாறு கழுகுகளின் ஊர்வலமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அடுத்த வாரம்… ஆப்பிரிக்க காடுகள் ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்தில் இருந்த போதிலும் எப்படி தப்பி பிழைத்தன. அதன் பின்னால் ஒரு பிரம்மாண்ட வரலாறு இருக்கிறது அந்த வரலாற்றை  உங்களுக்குச் சொல்கிறேன்.

தற்காலிக கூடாரங்கள்

தான்சானியா காடுகளில்  தங்குவதற்குத் தற்காலிக கூடாரங்கள் உண்டு. இந்தக் கூடாரங்கள் அமைப்பதற்கு காட்டில் உள்ள இடங்கள் சுற்றுலா கம்பெனிகளுக்கு, தான்சானியா அரசால் சில நிபந்தனைகளின் பேரில் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படுகின்றன.

அந்த இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, சுற்றுலா வாசிகளுக்குத் தேவையான உணவு,  நல்ல அறை, குளிப்பதற்கான தண்ணீர், பாதுகாப்பு, உட்பட அனைத்து வசதிகளையும்  குறிப்பிட்ட கம்பெனிகள் செய்து தருகின்றன.  மேலும் காடுகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்கின்றன. இந்தக் காட்டு மாடுகள் பிரமாண்ட ஊர்வலத்தின்போது எந்த இடத்தில் காட்டு மாடுகள் முகாம் இட்டு உள்ளன என்பதை அறிந்து   இந்தத் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்களான மாசாய் மக்கள் பாதுகாப்புத் தருகின்றனர். அழகிய இந்தக்கூடாரங்களில்,  இனிமையான வரவேற்பு. சுவையான ஆங்கில உணவுகள் இந்தக் காட்டுப் பயணத்தை மேலும் அழகூட்டுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.