திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தானத்தம் அருகே உள்ள இரண்டு கிராமங்களுக்கு நேற்று இரண்டு நபர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கோவில் ஒன்றில் அன்னதானம் வழங்க உள்ளதாக கூறி போலி ரசீது கொடுத்து மக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் பணம் பெறும் முன்பு பொதுமக்களுக்கு திருநீறு வழங்கியுள்ளனர். அதனை கையில் வாங்கும் மக்கள் அடுத்தடுத்து சுயநினைவை இழந்து, சிறிது நேரத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இதேபோன்று சேர்வைக்காரன்பட்டியில் ஒருவரிடம் திருநீறு வழங்கியபோது அவர் தன்னை அறியாமலே வீட்டில் இருந்த 3500 ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவர், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் படி, போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் அழைக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.