வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (மார்ச் 17) மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றார். இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மிட்செல் மார்ஷ், ஹெட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு துவக்கம் தந்தனர். சிராஜ் பந்தில் ஹெட் (5) போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் (22) வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார்.
லபுசேன் (15),ஜோஷ் இங்லிஸ் (26), கிரீன் (12) ஆகியோர் தன் பங்கிற்கு ஓரளவு கைகொடுத்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் (8), ஸ்டோனிஸ் (5), அபாட் (0), ஜாம்பா (0) விரைவில் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட், குல்தீப், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 189 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 39.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பின்னால் வந்த பாண்ட்யா(25ரன்) ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement