அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் நாளை மறுநாள் வரை பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 26 ஆம் தேதி பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. காரணம் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வகுத்துள்ள தேர்தல் சட்ட விதிகள் அப்படியாக அமைந்துள்ளது. எப்படியும் தேர்தல் நடைபெறாமலேயே எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார் என்றே தெரிகிறது.
அதே சமயத்தில் இந்த பொதுச் செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவிக்கையில், “பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
நிலைமை இப்படி இருக்க இப்படியான ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது நகைப்பாக உள்ளது. நாங்கள் இது குறித்து உடனடியாக முடிவு எடுப்போம். தமிழகமே இதுவரை கண்டிராத வகையில், ஆயிரம் நபர்களை கொண்டு வழக்குகளை தொடுப்போம்” என்று புகழேந்தி பேசியுள்ளார்.