கன்னியாகுமரி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை ஒட்டி இன்று மாலை முதல் குமரியில் சுற்றலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குமரி நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமான மூலம் கொச்சி வந்தார். அங்குள்ள கடற்படை விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின்னர் கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்டார். இதையடுத்து ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு மிக உயரிய நிஷான் விருதை வழங்கி கவுரவிக்கிறார். இதன் பிறகு திருவனந்தபுரம் செல்கிறார்.
நாளை மறுதினம் காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் வள்ளிக்காவில் உள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்திற்கு செல்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து மதியம் திருவனந்தபுரத்துக்கு திரும்புகிறார். தொடர்ந்து கவடியாரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை ஒட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.