கும்பகோணம்: கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேசன் (52), எம்.ஆர்.சுவாமிநாதன் (49). தொழிலதிபர்களான இருவரும், விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், நிதிநிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி பல கோடி வரை சம்பாதித்து தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டரில் வலம் வருவதால் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்று அழைக்கப்பட்டனர்.
இவர்கள் நிதி நிறுவனம் மூலம் ரூ.600 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கபப்ட்ட புகாரில் தனிப்படை போலீசார் ஹெலிகாப்டர் பிரதர்ஸை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற ஹெலிகாப்டர் சகோதரர்கள், கும்பகோண தனியார் நிதி நிறுவன வங்கியில் வைத்து உள்ள லாக்கரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ஹெலிகாப்டர் பிரதர்ஸ்களில் ஒருவரான சாமிநாதன் உடன் இருந்தார். இதனைத்தொடர்ந்து டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள அதே வங்கியின் மற்றொரு கிளையில் உள்ள ஒரு சில லாக்கர்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அவர்கள் பெயரில் உள்ள லாக்கர்களிலிருந்து சுமார் 4.5கிலோ தங்க நகைகள், 24.5 கிலோ வெள்ளி பொருட்களை கைப்பற்றி சென்றனர்.