புதுடெல்லி: தேசவிரோத சக்திகளுக்கான நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் பேசிய போது, இந்திய ஜனநாயகத்தை அவமானப்படுத்தியதாக கூறி, அதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. ஆனால், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜ தேசியத் தலைவர் ஜேபி. நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று வெளிநாட்டில் பேசியதன் மூலம் நாட்டின் ஜனநாயகம், இறையாண்மை மீது ராகுல் காந்தி தாக்குதல் நடத்தியுள்ளார். சுதந்திரம் பெற்ற பிறகு, இதற்கு முன்பு எந்தவொரு தலைவரும் இந்தியாவை அயல்நாட்டு மண்ணில் அவமதித்தது இல்லை. தேச விரோத சக்திகள் எப்போதுமே வலிமையான இந்தியா, அதன் பலம் பொருந்திய ஜனநாயகத்துடனும் மோதி வருகிறது. ராகுல் வெளிநாட்டு சதிகாரர்களுடன் சேர்ந்து நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார். அவர் தேச விரோத சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார்” என்று கூறியுள்ளார்.