தேவதானப்பட்டி: அருணாச்சல் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி மேஜர் உடல், இன்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை, மல்லிகா தம்பதியின் ஒரே மகன் ஜெயந்த் (35). இவர்கள் ஜெயமங்கலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஜெயந்த், என்சிசியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு அளவில் தங்கம் வென்றார். 2010ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினன்டாக பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் பெற்ற பதக்கங்கள் அடிப் படையில், தேர்வு எழுதி மேஜராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செல்லா சாரதிஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். மதுரையில் இருந்த ஆறுமுகம் பிள்ளை – மல்லிகா தம்பதி தற்போது சென்னையில் உள்ளனர். மேஜர் ஜெயந்த் மற்றும் அவரது மனைவி செல்லா சாரதிஸ்ரீ அருணாச்சல் பிரதேசத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டரில் ஜெயந்த் மற்றும் சக அதிகாரிகள் சென்றபோது துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டு ஜெயந்த் பலியானார். மேஜர் ஜெயந்த் உடல் விமானத்தில் நேற்றிரவு மதுரை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இச்சம்பவத்தால் ஜெயமங்கலம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
* ரூ.20 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.கி. ஜெயந்த் உட்பட இரண்டு ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன். தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர்.கி.ஜெயந்த் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.