தருமபுரி: தருமபுரியில் அரசுப் பள்ளிக்கு ஃபர்னிச்சர்ஸ் வழங்கச் சென்ற எம்எல்ஏ, காலை உணவு சாப்பிடாமல் வந்த குழந்தைகளுக்கு உணவு வாங்கி வந்து பரிமாறினார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வை நகர் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் தற்செயலாக இந்தப் பள்ளி வளாகத்தில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன்(பாமக) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு போதிய ஃபர்னிச்சர்ஸ் இல்லாததால் தரையில் அமர்ந்து அவர்கள் பாடம் பயில்வது தெரிய வந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்துச் சென்ற எம்எல்ஏ, அப்பள்ளிக்கு ஃபர்னிச்சர் வழங்கிட தனது தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் வாங்கப்பட்ட ஃபர்னிச்சர்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று(வெள்ளி) பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்சியில் பங்கேற்ற எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், புதிய ஃபர்னிச்சர்களை ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளிக் குழந்தைகளிடம் வழங்கினார்.
அதன்பின்னர், அங்கு பயிலும் குழந்தைகளுடன் சற்று நேரம் எம்எல்ஏ உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பள்ளி மாணவர்களில் 5 பேர் பல்வேறு காரணங்களால் இன்று காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையறிந்த எம்எல்ஏ, ஓட்டலுக்கு சென்று உடனடியாக உணவு வாங்கி வருமாறு தன் உதவியாளரை அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் உணவு பள்ளிக்கு வந்து சேர்ந்த நிலையில், நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட புதிய ஃபர்னிச்சர்களில் அந்தக் குழந்தைகளை அமர வைத்து அவர்களுக்கு உணவை பரிமாறி சாப்பிடச் செய்தார் எம்எல்ஏ.
பின்னர், ‘அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களில் பலர் இன்றளவும் மிகவும் வறிய நிலையில் தான் உள்ளனர். இதுபோன்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளில் பலர் சூழல் காரணமாக காலை உணவு உண்ணாமலும் பள்ளிக்கு செல்கின்றனர். இதுபோன்ற குழந்தைகள் பசி சோர்வு இல்லாமல் கல்வி பயில வேண்டுமெனில், தமிழக அரசு அண்மையில் குறிப்பிட்ட ஒன்றியங்களில் மட்டும் அறிமுகம் செய்த காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரைவாக விரிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்துவேன்’ என்று எம்எல்ஏ தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி, பாமக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து உடனிருந்தனர்.