பெரியகுளம்: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவை சேர்ந்த ஆறுமுகம் – மல்லிகா தம்பதியின் ஒரே மகனான ஜெயந்த் (37), ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் விவிபி ரெட்டியுடன் ஜெயந்த் சென்று கொண்டிருந்தார். சங்கே எனும் கிராமத்தில் இருந்து மிசாமாரி எனும் இடத்துக்கு சென்றபோது ஹெலிகாப்டர் உடனான தொலைத்தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
மேற்கு சுமேங் மாவட்டத்தில் மண்டாலா அருகே போம்டிலா எனும் இடத்தில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். அங்கு லெப்டினன்ட்ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரது உடல்களும்டெல்லி விமானப் படை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் ரெட்டியின் உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேவிமானத்தில் மேஜர் ஜெயந்த் உடல் நேற்று இரவு மதுரை வந்து பின்னர், அங்கிருந்து ஜெயமங்கலம் கொண்டு வரப்பட்டது. இன்று காலை அவரது உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
மறைந்த ராணுவ மேஜர் ஜெயந்துக்கு சாராஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
முதல்வர், தலைவர்கள் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ராணுவ வீரர் மேஜர்ஜெயந்துக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த ஜெயந்தின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கஉத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.