தருமபுரி: ரத்த சோகை பிரச்சினைக்கு தீர்வு தரும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ரேஷன் கடைகளில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தது: ரத்த சோகை பிரச்சினை நம் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களிடம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று, 75-வது சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள்(PHH), அந்தியோதிய அன்னயோஜனா(AAY) ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை போக்க இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகியவை அவசியம். இந்த சத்துக்களை உள்ளடக்கிய அரிசி மணிகள் தயாரிக்கப்பட்டு, அவை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட அரிசி தயார் செய்யப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்புச் சத்து, ரத்த சோகை பிரச்சினையை தடுக்கும். போலிக் அமிலம் கரு வளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கு உதவும். வைட்டமின் பி-12 நரம்பு மண்டலம் இயல்பாக செயல்பட உதவுகிறது. இந்த அரிசி வழக்கமான அரிசியைப் போன்ற தோற்றம் மற்றும் சுவை கொண்டதாகவே இருக்கும். வழக்கமாக சமைக்கும் முறையிலேயே இந்த அரிசியையும் சமைத்து உண்ணலாம்.
எனவே, ரேஷன் கடைகளில் விரைவில் வழங்கப்பட உள்ள இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை, தகுதிவாய்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் தவறாமல் வாங்கி பயன்படுத்தி உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.