‘‘தமிழகத்தில் நான்கு முக்கியமான மோசடி நிறுவனங்களிடம் ரூ.13,700 கோடியைப் பறிகொடுத்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் தமிழகக் காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி-யான ஆசியம்மாள். அது மட்டுமல்ல, ஆருத்ரா கோல்டு, சென்னையைச் சேர்ந்த ஹிஜாவு, வேலூரைச் சேர்ந்த எல்.என்.எஸ் – ஐ.எஃப்.எஸ், திருச்சியைச் சேர்ந்த எல்ஃபின் ஆகிய நான்கு நிறுவனங்களின் 1,115 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன; அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; இந்த நிறுவனங்களை நடத்தி, வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐ.ஜி சொல்லியிருக்கிறார்!
ஆனால், மோசடி நடந்து, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கண்காணாத இடத்துக்கு ஓடி ஒளிந்தபின், நடவடிக்கை எடுப்பதைப் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் எப்போது நிறுத்தப்போகிறார்கள் என்கிற கேள்வியை மக்களுடன் சேர்ந்து, நாணயம் விகடனும் தொடர்ந்து எழுப்பிவருகிறது. கடந்த 26.02.23 தேதியிட்ட இதழில் ‘நேர்மையாகச் செயல்படுங்கள் முதல்வரே!’ என்று தலையங்கம் எழுதியிருந்தோம். குறிப்பாக, ‘ஹிஜாவு’ நிறுவனத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, மற்ற மோசடி நிறுவனங்களின் மீது ஏன் எடுக்க வில்லை எனக் கேட்டிருந்தோம். இந்த நிலையில்தான், மற்ற நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இப்போது தகவல்கள் வெளிவருகின்றன.
ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ் மோசடி நடந்து, ஒன்பது மாதங்களாகிவிட்டன. விசாரணை என்கிற பெயரில் பல மாதம் காலம்கடத்திவிட்டு, இப்போது நடவடிக்கைப் பட்டியலை வாசிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பணம் போட்டது ஊரறிந்த உண்மை. அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை முதலில் கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் இத்தனை காலதாமதமா என்பது பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கே வெளிச்சம்!
பொருளாதாரக் குற்றப் பிரிவின் தற்போதைய அறிவிப்பைப் பார்த்தால், தமிழகத்தில் இந்த நான்கு நிறுவனங்கள் மட்டும்தான் மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டது போல நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பல்வேறு மோசடி நிறுவனங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறதே! அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த பொருளாதாரக் குற்றப் பிரிவு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ‘இந்த ஊரில் இந்த நிறுவனம் மோசடி செய்து வருகிறது என்று தகவல் அனுப்புங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்கிற அறிவிப்பை பொருளாதாரக் குற்றப் பிரிவு இது வரை வெளியிடாதது ஏன்? அப்படி யாராவது தகவல் தந்தாலும், ‘ஆதாரம் இருக்கா’ என்று கேட்டு, அவர் வாயை மூடும் காரியம்தானே நடக்கிறது?
இறுதியாக, ஓர் எச்சரிக்கை. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிகளை அறிந்து, அந்த வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது மக்களின் கடமை. பேராசைப்பட்டால், பெருநஷ்டம் உண்டாகும் என்பதைப் புரிந்து நடக்காதவரை மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே நிதர்சனம்!
– ஆசிரியர்