அகமதாபாத்: காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக எம்எல்ஏ பதேசிங் சவுகான் பேசியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காதல் திருமணங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பெரும்பாலான காதல் திருமணங்கள் வெளி மாவட்டங்களில் நடைபெறுகின்றன. இந்த காதல் திருமணங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணம் செய்த பெண்கள், அவர்களது பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்க காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த நடைமுறையை அமல்படுத்தினால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் வரை குறையும். இவ்வாறு பாஜக எம்எல்ஏ பதேசிங் சவுகான் பேசினார்.
இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனி தாக்கோர் பேசியதாவது: நாங்கள் காதல் திருமணத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் குற்றப் பின்னணி உடைய நபர்கள், இளம் பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து காதல் திருமணம் செய்கின்றனர். இதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தடுக்க காதல் திருமணம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதாவது காதல் திருமணங்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளில் மட்டுமே நடைபெற வேண்டும். பெற்றோரின் சம்மதமும் அவசியம். இந்த நடைமுறையில் காதல் திருமணங்கள் நடைபெற்றால் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். போலீஸாரின் பணிச் சுமை குறையும். இதர வழக்குகளில் போலீஸார் தங்கள் கவனத்தை செலுத்த முடியும். இவ்வாறு காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனி தாக்கோர் பேசினார்.