தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்; 160 பேருக்கு ரூ.2.25 கோடி ஊக்கத் தொகை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற160 தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 76 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் கடந்த ஜனவரியில் நடந்த ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 19 தங்கம், 30 வெள்ளி, 20 வெண்கலம் என 69பதக்கங்கள் வென்ற தமிழக விளையாட்டு வீரர்கள் 137 பேருக்கு ரூ.1.62கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.

கடந்த 2020 அக்டோபரில் நடந்த ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ்கோப்பைக்கான சதுரங்க போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்க பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதா, ஆர்.வைஷாலிக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில்கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த15-வது தேசிய ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்கம், குழு போட்டிகளில் 1 தங்கம் என மொத்தம் 6 பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கு ரூ.21.50 லட்சம் வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியின் மகளிர் பிரிவு ‘சேபர்குழு’ போட்டியில் வெண்கலம் வென்ற ஜே.எஸ்.ஜெபர்லினுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை,தேசிய அளவில் பல்கலைக்கழகங்கள் இடையே சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 2020 ஜனவரியில் நடந்த கராத்தே போட்டிகளில் 6 பதக்கங்கள் வென்ற 11 வீரர்களுக்கு ரூ.19 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப் படுகிறது.

இதன் அடையாளமாக, 8 வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பயிற்றுநர்களுக்கு பணி: மேலும், விளையாட்டு பயிற்றுநர்களுக்கான நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 76 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. இதன்அடையாளமாக, 8 பேருக்கு நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.