சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் வளர்ச்சிப்பணிகள், திட்டமிடல் மற்றும் பணி ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திரக் கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 43 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சியின் 31வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மகேஸ்வரி உள்பட எஞ்சிய 5 கவுன்சிலர்கள் கலந்துக் கொள்ளவில்லை எனத்தெரிகிறது. கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டு அரசின் பார்வைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கவுன்சிலர்களுக்கு அரசு வழங்கும் ரூ.800 அமர்வு படியும், கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 31வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் மகேஸ்வரி, சிவகாசி மாநகராட்சிக்கு நேற்று வந்து கவுன்சிலர்கள் கூட்டம் முடிந்து 20 நாள்களுக்கு மேலாகியும் தனக்கு ஏன் அமர்வுபடி இன்னமும் வழங்கவில்லை எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கவுன்சிலர் மகேஸ்வரியிடம் பேசுகையில், “சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. சிவகாசி மாநகராட்சியை பொறுத்தவரை கூட்டத்தில் கலந்துக் கொள்ளாவிட்டாலும், கவுன்சிலர்களுக்கு அமர்வுபடி வழங்குவது கடந்த ஆட்சியிலிருந்தே நடந்துவருகிறது. இதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையில், கடந்த கூட்டத்திற்கு வழங்கப்படவேண்டிய அமர்வுபடி கேட்டு மாநகராட்சி அலுவலர்களை அணுகினேன். அப்போது பேசியவர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஊரில் இல்லை. அவரிடம் கேட்டுவிட்டுத்தான் தரமுடியும் எனக்கூறினர். சரியென, நானும் பதில் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கவுன்சிலர்கள் கூட்டம் முடிந்து 17 நாள்கள் ஆகிறது. இதற்கிடையில் நான் அமர்வுப்படி கேட்டு ஒருவாரம் மாநகராட்சிக்கு அலைந்திருக்கிறேன். கேட்கும் சமயமெல்லாம் ஆணையாளர் ஊரில் இல்லை, அலுவலகத்தில் இல்லை, ஆய்வுக்கூட்டம் என்பதை காரணம்காட்டி தட்டிக்கழித்து வந்தனர். இதுவே எனக்கு மன உளைச்சலை தந்தது. இந்தநிலையில், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அலுவலகத்தில் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டு அங்குச்சென்றேன். அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து அமர்வுப்படி கேட்டு பேசியபோது, `அதுயெல்லாம் ‘கிளார்க்’ பிரிவில் பேசி வாங்கிக்கொள்ளுங்கள். என்னிடம் எதுவுமில்லை’ என்றார்.
அவருடைய பதிலையடுத்து, மறுபடியும் கிளார்க் பிரிவுக்குச்சென்று பார்த்தபோது, அலுவலர்கள் சீட்டில் இல்லை. கேட்டதற்கு, மேல்மாடிக்கு சென்றிருப்பதாக கூறினர். கிட்டத்தட்ட 3 முறைக்கு மேல் கிளார்க் கனகராசு என்பவரை தேடி மாநகராட்சி முழுவதும் அலைந்துவிட்டேன். ஆனாலும் அவரை பார்க்கமுடியவில்லை. பின்னர் இருக்கைக்கு வந்த கனகராசுவிடம், அமர்வுப்படி தரச்சொல்லி கேட்டேன். அப்போது, கடந்த கூட்டத்திற்கான கணக்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு பணம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக கனகராசு தெரிவித்தார். இந்த பதில் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
அந்த ஆதங்கத்தில், `எனக்கு அமர்வுப்படி வேண்டுமென்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு அமர்வுப்படி வழங்கப்படமாட்டாது என்பதை முன்னரே தெரிவித்திருந்தால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலும், அலைச்சலும் மிச்சமாகியிருக்கும்தானே. அதை ஏன் இவர்கள் செய்யவில்லை. ஒரு மாமன்ற உறுப்பினரை அலைக்கழிக்க வைத்து இப்படியொரு பதில் சொல்வதற்கு பதிலாக ஆரம்பத்தில் நான் அமர்வுப்படி கேட்ட நேரத்திலேயே விளக்கியிருந்தால், என்னுடைய வழக்கமான பணிகளை நான் கவனித்திருப்பேன். மாநகராட்சியில், எந்த வேலையும் லஞ்சம் வாங்காமல் ஊழியர்கள் செய்வதில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வராமல் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். மாநகராட்சி அலுவலகத்துக்குள் பணியாளர்கள், தொடர்புடையவர்கள் தவிர தேவையில்லாதவர்களை அனுமதிக்காதீர்கள்’ என்று நல்லது சொல்வதற்காக பேசியதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என்றார்.