காற்று இல்லாது என்ன பண்றது கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாமா..? மரம் வெட்டியை வறுத்தெடுத்த பெண்..! அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள்!

சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில், குமாரசாமிப்பட்டி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்களை அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து இயந்திரங்கள் மூலம் வெட்டிக் கொண்டிருந்தார்.

சில மணி நேரங்களில் அந்த பகுதியில் நின்ற பழமை வாய்ந்த அரச மரம், புங்கன் மரம் உள்ளிட்ட மரங்களின் கிளைகளை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நிழலாகவும், சுத்தமான காற்றையும் தந்து கொண்டிருக்கின்ற மரங்கள் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் அழகு ராஜனிடம் கேள்வி எழுப்பினர்.

மின்கம்பியில் உரசி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாமல் இருப்பதற்காக வெட்டுவதாக கூறிய நிலையில் அந்த மரங்கள் இருக்கும் பகுதியில் எந்த ஒரு மின்கம்பியும் இல்லை என்று சுட்டிக்காட்டியதும், அங்கு நின்ற பழைமையான மரங்களின் கிளைகள் பேருந்துகளில் உரசுவதால் வெட்டுவதாக கூறினார்.

இந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இருக்கின்றதா ? என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் தான் சமூக ஆர்வலர் என்றும் மக்கள் மீது மரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக வெட்டுவதாக சமாளித்தார்.

இதையடுத்து தொடர்ந்து மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசை கண்டதும் பம்மிய, மரம் வெட்டி அழகுராஜன் தன்னிடம் அனுமதி இல்லை என்று கூறியதும் அங்கு வந்த பெண் ஒருவர் காற்று இல்லாது என்ன பன்ன முடியும் ? கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாமா..? என்று கேட்டு அழகு ராஜனை வார்த்தைகளால் வறுத்து எடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகளும் ஆள் வைத்து மரம் வெட்டிய அழகு ராஜனிடம் விசாரித்தனர். எந்த ஒரு அனுமதியும் இன்றி நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது என்று எச்சரித்து வெட்டிய மரக்கிளைகளை பறிமுதல் செய்தனர்.

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மரம் வெட்டுவதற்கு பதில், எந்த ஒரு காரணமும் இன்றி வீட்டுக்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்த்தால் சிறப்பாக இருக்கும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.