தனுஷ்கோடி டூ தலைமன்னார்.. பாக் ஜலசந்தியை இருபுறமும் நீந்தி சாதனை படைத்த பெண்!

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) என்பவர் படைத்துள்ளார்.
ஆழம் குறைந்த ஆபத்தான கடல் பகுதி!
பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடற்பகுதியும் இதுவே.
image
இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனை.. 
இதுவரை 4 பெண்கள் உட்பட 18 பேர் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கோ நீந்திச் சென்றுள்ளனர். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்துள்ளனர்.
ஆனால், ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்திற்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 3 பேர் மட்டுமே. அதில் முதலாமானவர், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்திச் சென்றார். மொத்தம் தூரத்தை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்.
image
இதையடுத்து இதே சாதனையை கடந்த 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர என்பவர் 28 மணி 19 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த 29.03.2022 அன்று தேனியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சினேகன் தனது 14-வது வயதில் 19 மணி 45 நிமிட நேரத்தில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி சாதனை படைத்தார்.
பெங்களூரு நீச்சல் வீராங்கனையின் துணிச்சலான முயற்சி!
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த தொழில்முறை நீச்சல் வீராங்கனையான சுஜேத்தா தேப் பர்மன் (40) என்பவர், கடந்த புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் தனுஷ்கோடி பழைய துறைமுகத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி நீந்தத் துவங்கினார். இதையடுத்து 12 மணி 15 நிமிடங்கள் நீந்தி வியாழன் அதிகாலை 5.00 மணியளவில் தலைமன்னாரை அடைந்தார். இதைத் தொடர்ந்து உடனே தலைமன்னாரில் இருந்து மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி வியாழன் பகல் 12.20 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கரையை அடைந்தார்.
image
இந்நிலையில், 62 கிலோ மீட்டர் தூரத்தை 19 மணி 31 நிமிடங்களில் நீந்தி ஜேத்தா தேப் பர்மன் புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முதன் முறையாக தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக் ஜலசந்தி கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையை சுஜேத்தா தேப் பர்மன் படைத்துள்ளார். அதேபோல் தேனியைச் சேர்ந்த சினேகன் சாதனையையும் முறியடித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.