மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உட்பட சிலர் காங்கிரஸ் கட்சி இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டிவிட்டு புதிய அணியை உருவாக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்துப்பேசினார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் தாக்கரே, மு.க.ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் மூன்றாவது அணியை உருவாக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார். இதில் இருவரும் சேர்ந்து காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை உருவாக்க முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அகிலேஷ் யாதவ் இதற்கு முதல் முயற்சி எடுத்திருப்பதால் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ள மம்தா பானர்ஜி அடுத்த கட்டமாக தங்களது அணியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சேர்க்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அடுத்த வாரம் ஒடிசாவுக்கு சென்று நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பண்டோபாதியா அளித்த பேட்டியில், “எதிர்கட்சிகளில் காங்கிரஸ் பெரியண்ணா போல் நடந்து கொண்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 23-ம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச இருக்கிறார். இதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பது குறித்து இருவரும் பேசுவர். நாங்கள் மூன்றாவது அணி குறித்து பேசவில்லை. ஆனால் பா.ஜ.க.வை எதிர்க்க பிராந்திய கட்சிகள் வலுவடையவேண்டும் என்று விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விடமிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விடமிருந்து விலகி இருக்க விரும்புகிறோம்.
பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மீது மத்திய விசாரணை ஏஜென்சிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது” என்று தெரிவித்தார். நவீன் பட்நாயக் இது வரை எந்த வித மூன்றாவது அணிக்கும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அதோடு தேவைப்படும் நேரத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.விற்கு ஆதரவும் கொடுத்து வருகிறார். எனவே அவரை மூன்றாவது அணிக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அதேசமயம் ஒடிசாவில் பாஜக அதிக அளவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. அதனை சுட்டிக்காட்டி நவீன் பட்நாயக்கை தங்களது பக்கம் இழுக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனியாக அனைத்து மாநிலத்திலும் தனது கட்சியை வளர்க்க முயன்று வருகிறார். அனைத்து தேர்தல்களிலும் இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து மக்களை தன் வசம் இழுக்க முயன்று வருகிறார். மற்றொரு புறம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அவர் இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்களை காரணம் காட்டி அவரை நாடாளுமன்றத்திலிருந்து சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள நிலை மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.