தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலன் புதுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரஷர் ஆலையில் நவீன் குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் மேலாளர் நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், அவர் வந்தபிறகு நன்கொடை வாங்கி செல்லுமாறு நவீன்குமார் கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் இருவரும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
ஆனால் நவீன்குமார் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் பூபதிபாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தாங்கள் வந்த சொகுசு கார்களை நிறுத்தி ரகளை செய்ய தொடங்கினர்.
அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த மேலாளர் நவீன்குமாருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தான்குளம் போலீஸார் பூபதிபாண்டியன, ஜெய ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதோடு அந்த நிறுவனத்தின் முன் நிறுத்திவைக்கப்பட்ட அவர்களது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
newstm.in