அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் 26-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்த அறிவிப்பிபடி,
அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணி வரை,
20-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை,
21-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம்,
வாக்கு எண்ணிக்கை 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வரும் 26-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதிமுகவிற்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.