காத்மாண்டு: நேபாளத்தின் மூன்றாவது துணை ஜனாதிபதியாக மாதேஸ் பகுதியைச் சேர்ந்த தலைவர் ராம் சகாய பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாள நாட்டின் துணை ஜனாதிபதியாக இருக்கும் நந்தா பகதூரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதால் புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. நேபாளத்தின் 8 ஆளும் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் மாதேஸ் பகுதியை சேர்ந்த ராம் சகாய பிரசாத் யாதவ் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்பாடி கட்சியை சேர்ந்தவர்.
சிபிஎன்-யுஎம்எல் கூட்டணி சார்பில் அஷ்ட லட்சுமி ஷக்யா மற்றும் ஜனமத் கட்சியின் மம்தா ஜா ஆகியோர் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் 52 வயதான ராம் சகாய பிரசாத் யாதவிற்கு 184 எம்பிகள், 329 மாகாண சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 30,328 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து அவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஷக்யாவுக்கு 104 எம்பிகள், 169 மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், மம்தா ஜாவுக்கு 23 எம்பி, 15 மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைத்தன.