லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில்178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆண்டின் மார்ச் 19-ம் தேதி மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். கடந்த 2022-ம்ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேசசட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
குற்றங்கள் குறைந்தது: கடந்த 2017-ம் ஆண்டில் அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்து வருகின்றன. குறிப்பாக கொலை, ஆள்கடத்தல், கலவரம், பாலியல் வன்கொடுமை, கொள்ளை, வரதட்சிணை கொலைகள்உள்ளிட்ட குற்றச் செயல்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
துணிகரமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2017 முதல் கடந்த 6 ஆண்டுகளில் 10,713என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட் டுள்ளன. இதில், 178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மீரட்டில் அதிகம்: உத்தர பிரதேசத்தில் மிக அதிகபட்சமாக மீரட் காவல் சரகத்தில் 3,152 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 63 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 1,708 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆக்ரா காவல் சரகத்தில் 1,844 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 14 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, 258 பேர் படுகாயம் அடைந்தனர். பரேலிகாவல் சரகத்தில் 1,497 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 437 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து உத்தர பிரதேச காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளில் சமூகவிரோதிகளின் ரூ.4,459 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோரின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்படுகின்றன. துணிகரமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுகின்றன.
குற்றங்களை கட்டுப்படுத்து வதற்காக மாநில காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. காசி, மதுராவில் கூடுதல் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-வது முறை பதவியேற்ற பிறகு காவல் துறையில் கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஆன்டிரோமியோ: சமூக வலைதள குற்றங்களைக் கண்காணிக்க தனிப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க “ஆன்டிரோமியோ” குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி ஏராளமான சமூக விரோதிகள் காவல் நிலையங்களில் சரண் அடைந்து வருகின்றனர்.இவ்வாறு உத்தர பிரதேசகாவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதாகையுடன் சரண் அடைந்த பைக் திருடன்: உத்தர பிரதேசத்தின் முஷாபர்நகர் பகுதியை சேர்ந்த பைக் திருடன் அங்குர். கடந்த 15-ம் தேதி அவர் முஷாபர்நகரின் மன்சூர்பூர் காவல் நிலையத்தின் முன்பு பதாகையுடன் நின்றிருந்தார். அதில், “ நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் யோகி” என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ரோஜன்ட் தியாகி கூறும்போது, “பைக் திருட்டு வழக்கில் தொடர்புடைய அங்குர், என்கவுன்ட்டருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவரிடம் இருந்து ஏராளமான பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன. என்கவுன்ட்டருக்கு அஞ்சி ஏராளமான ரவுடிகள் காவல் நிலையத்தில் சரண் அடைந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.