சுரண்டப்படும் தென்பெண்ணை ஆறு: உடைந்த தடுப்பணைகள்; அபாயகர நிலையில் பாலங்கள்; கவனிக்குமா அரசு?!

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான ஆறாக இருக்கிறது தென்பெண்ணை. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் சமீப காலமாக தொடர் சேதங்களை சந்தித்து வருகின்றன. தளவனூர், எல்லீஸ் சத்திரம் போன்ற முக்கிய தடுப்பணைகள் வெள்ளத்தில் உடைந்தபோதும், இன்று வரையில் சரிசெய்யப்படாமல் காட்சிப்பொருளாகவே கிடக்கின்றன. தற்போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையின் மேம்பாலங்களும், ஆற்றின் நடுவே உள்ள மின்கோபுரங்களும் அடுத்த சேதத்தை நோக்கியபடி அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன. இந்த அபாயகர நிலைக்கு காரணமே, ஆற்றில் மணல் குவாரி செயல்பட்ட போது அதிகப்படியான மணல் சுரண்டப்பட்டதுதான் என கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து காரிகால சோழன் பசுமை மீட்புப்படையை சேர்ந்த அகிலன் என்பவரிடம் பேசினோம். “விழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையில் (NH45) சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களையும், சென்னையும் இணைக்கும் பிரதான பாலமாகவும் இது இருக்கிறது. இதன் வழியே, தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதேபோல, சற்று தொலைவில் இரு ரயில்வே பாலங்களும் அமைந்துள்ளன.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாலம்

பயணம் மற்றும் பொருளாதார ரீதியான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பாலங்கள், மண்ணரிப்பினால் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளன. மணல் மட்டத்தில் இருந்து, சுமார் 3.5 மீட்டர் ஆழத்திற்கு கீழே தூண்களின் அடித்தளமே தெரியும்படி மண்ணரிப்பு ஏற்பட்டிருக்கிறது. முற்காலங்களில் இப்பகுதியில் குவாரிகள் செயல்பட்டபோது அதிகப்படியான மணல் அள்ளப்பட்டதுதான் இதற்கெல்லாம் காரணம். இப்போது புதியதாக ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரியையும் துவங்கிவிட்டார்கள்.

இப்படியே ஆறு, பள்ளமாகிக்கொண்டே போவதால் பல ஏரிகளுக்கு இரத்த நாளங்களாக இருக்கும் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவும் வாய்ப்பில்லை. பொதுமக்களின் எந்த கருத்தையும் பொருட்படுத்தாமல், ஆளுங்கட்சிக்காரர்கள் மற்றும் மணல்கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆதரவாகத்தான் அதிகாரிகளும், அரசும் செயல்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையினால் இந்த பாலங்களுக்கு 100% கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதுதான் நிதர்சனம்” என்றார் ஆதங்கமாக.

ஹேமராஜன் – அகிலன்

மேலும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமராஜன் கூறுகையில், “2009-ம் ஆண்டு தொடங்கி, மாரங்கியூர், ஏனாதிமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற மணல் குவாரிகளால் எங்கள் பகுதி கடுமையான வறட்சிக்கு உள்ளானது. தென்பெண்ணை ஆற்றில் சுமார் 9 இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளால் களிமண்ணும், பாறைகளும் தெரியும் அளவிற்கு மணல் சுரண்டப்பட்டுவிட்டது. அதன் விளைவாகதான், வெள்ளப்பெருக்கின் போது  மண்ணரிப்பு ஏற்பட்டு இந்த பாலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லீஸ்சத்திரம் தடுப்பணையும் இதே காரணத்தால்தான் உடைந்தது.

மண்ணரிப்பில் இருந்து பாலங்களை காப்பதற்கு, கண்துடைப்பாக மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு கட்டுகிறது அரசு. பெரிய அளவில் மீண்டுமொரு ஆற்று வெள்ளம் வந்தால், இந்த ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை பாலங்கள் மட்டுமின்றி… ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களும், பெட்ரோல் குழாய்களும் கட்டாயமாக பாதிக்கப்படும். பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் கிராமசபை தீர்மானத்திற்கும் எதிராக எங்கள் ஊரில் மணல் குவாரியை துவங்கிவிட்டார்கள். அதனை உடனடியாக தடைசெய்ய வேண்டும்” என்றார்.

தூண்களில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு அமைக்கும் காட்சி

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலத்தின் பாதிப்புகள் குறித்து விழுப்புரம் என்.எச்.ஏ.ஐ (NHAI) திட்ட இயக்குநர் வரதராஜனிடம் பேசினோம். “பாலத்தின் தூண்களுடைய நீளம், ஆற்று படுக்கையில் இருந்து அடித்தளம் வரையில் 8 மீட்டருக்கு கீழுள்ளது. அதனால் பாலத்திற்கு ஏதும் ஆகாது. ஆற்றின் நீரோட்ட திசையில், பாலத்திற்கு கீழ்ப்பகுதிகளில் முற்காலங்களில் மணல் எடுத்திருப்பார்கள். தற்போது வெள்ளம் வரும்போது, அதை நோக்கியடி மணல் அடித்துச் செல்லப்படுவதால் இவ்வாறு கொஞ்சம் மண்ணரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாலத்தை பாதுகாப்பதற்கு, முதற்கட்டமாக மணல் முட்டைகளை தூண்களை சுற்றி அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் மூலமாக வரும் காலங்களில் மணல் தானாக அங்கு சேர்ந்துவிடும். மணல் மூட்டைகள் பயனளிக்கவில்லை எனில், அடுத்தக்கட்டமாக கருங்கற்களை கொண்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும்” என்றார்.

வரதராஜன் – சூர ஜெகதீஷ்

மேலும், ரயில்வே பாலத்தின் சேதங்கள் குறித்து விழுப்புரம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சூர ஜெகதீஷிடம் பேசினோம். “மழை பெய்யும் பருவ காலங்களில், ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும்போது மணல் அரிப்பு ஏற்படும். மணல் குவாரிகளால் அதிகப்படியான மணல் அள்ளியதுதான் இதற்கு காரணமா என உறுதியாக சொல்ல முடியாது.

ரயில்வே பாலம் – தென்பெண்ணை
தளவானூர் தடுப்பணை
ரயில்வே பாலம் – தென்பெண்ணை
மின் கோபுரம்
ரயில்வே பாலம்
தளவானூர் தடுப்பணை
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை

1998 மற்றும் 2008 காலக்கட்டங்களில் கட்டப்பட்ட இரண்டு இரயில்வே பாலங்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே செல்கின்றன. மண் அமைப்பை கணக்கில் கொண்டுதான் பாலத்தின் அடித்தளம் அமையும். இன்னும் பல மீட்டர் ஆழத்தில்தான் அடித்தளம் இருக்கும். எனவே, பாலம் உறுதித்தன்மையோடு தான் இருக்கிறது. மழை காலங்களில் வெள்ளம் வந்து சென்றதும், ஒவ்வொரு ஆண்டும் பாலத்தில் ஆய்வு மேற்கொள்வோம். ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்து பாலத்தை பலப்படுத்துவதற்கான பணியை ரயில்வேத்துறை செய்யும்” என்றார்.

மணலரிப்பு சேதங்கள் மற்றும் மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்(முன்னாள்) மோகனிடம் விளக்கம் கேட்டோம். “தென்பெண்ணை ஆற்றில், தண்ணீர் போக்கு ஒரே பக்கமாக இருப்பதால், அப்பகுதியில் பள்ளத்தாக்கு போன்று ஏற்படுகிறது. அதனால்தான், பாலத்தின் தூண்களின் அருகே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, புவியியல் ஆய்வு மேற்கொண்டு, அந்த மட்டத்தை சரிசெய்வதுடன் தளவானூர் மற்றும் எல்லீஸ்சத்திரம் தடுப்பணைகளையும் ஸ்திரத்தன்மையோடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு முன்பும் முறையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதனுடைய வீடியோ பதிவை பார்த்த பின்னரே கிளியரன்ஸ் கிடைத்தது. ‘அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மணல் எடுத்தால், முதலில் குவாரி இயங்குவதையே  நிறுத்துவிடுவேன்’ என நானும் கண்டிப்பாக சொல்லியிருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரதானமான இரு பாலங்களின் தூண்களை சுற்றி தற்காலிகமாகவே மணல் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தூண்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், விரைவில் கான்க்ரீட் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

உடைந்துப்போன தளவானூர் தடுப்பணை

தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய ஆட்சியரிடம் பேசினோம்… விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, “இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தியுள்ளோம். இரயில்வே தரப்பில், பாலத்தின் அடித்தளம் பாதுகாப்பான ஆழத்தில் உள்ளது என்றும், பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். என்.எச்.ஏ.ஐ தரப்பிலும் நெடுஞ்சாலை பாலத்திற்கான தற்காலிக பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தூண்களை சுற்றி கம்பி வலை பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில், தண்ணீர் போக்கு ஒரே பக்கமாக இருப்பதால், அப்பகுதியில் பள்ளத்தாக்கு போன்று ஏற்படுகிறது. அதனால்தான், பாலத்தின் தூண்களின் அருகே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்கான புவியியல் ஆய்வு மேற்கொண்டு, அந்த மணல் மட்டத்தை சரிசெய்து தண்ணீர் பரவலாக செல்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தளவானூர் மற்றும் எல்லீஸ்சத்திரம் தடுப்பணைகளையும் ஸ்திரத்தன்மையோடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு முன்பு முறையான ஆய்வுகளும் செய்யப்பட்டிருக்கிறது, கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், உயர் நீதிமன்றம் மணல் குவாரி விஷயங்களை கவனிப்பதால், பெரும்பாலும் குவாரி கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகின்றன. ஒரு சில மக்கள் இது போன்ற புகார்களை கூறுவார்கள். அவர்களுக்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளித்து வருகிறோம். ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களின் பாதிப்பு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.