கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்டோ அந்தோனி சபரிமலை விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 2020ஆம் ஆண்டில் கேரளா மாநில தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் சபரிமலை அருகே உள்ள எருமேலி பகுதியில் விமான நிலையம் அமைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இதற்கான சாத்தியக் கூறுகள், ஆய்வு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். விமான நிலையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அடுத்ததாக சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றும், புதிய விமான நிலையம் அமைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் ஆய்வு செய்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த புதிய விமான நிலைய கட்டுமானத்தால் 150 கிமீ சுற்றளவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து அதன்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க 2,300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான செலவு சுமார் ரூ.4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். அதேபோல, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.
newstm.in