தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியின்போது, ஏரி கரையின் மீது ஏற முயன்ற யானை, தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பரிதாபமாக உயிரிழந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
25 வயதான அந்த யானை, கொலவள்ளி கிராமத்துக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஏரிப்பகுதிக்குச் சென்ற யானை, கரை மீது ஏறி, மறுபக்கம் இறங்க முயற்சித்தது. பிளிறிக்கொண்டே கரை மீது ஏற முயன்றபோது, அதன் தும்பிக்கையானது கரையை ஒட்டி தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
சில தினங்களுக்கு முன்பு மாரண்டஅள்ளி பகுதியில் விவசாய விளைநிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.