இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். 35 ஆயிரம் டிக்கெட்டுகள் கொண்ட சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், 5100 டிக்கெட்டுகள் விற்பனை இன்று நடைபெறுகிறது.
C,D,E கேலரிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கு தலா இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட உள்ளது. I,J,K மற்றும் C,D,E குளிர்சாதன கேலரி, F,G ஆகிய விஐபி கேலரி டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஏற்கனவே முடிந்துள்ளது.
இந்நிலையில், போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த அதிக அளவிலான காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து வரிசையை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
புதிய தலைமுறை சார்பில் செய்தியாளர் பாலவெற்றிவேல் காத்திருந்த ரசிகர்களிடம் உரையாடிய பேட்டி விவரம் பின்வருமாறு..
”தல தோனியை பார்த்துவிடலாம் என வந்திருக்கிறேன்..”
ஆந்திராவில் இருந்து வந்திருந்த ரசிகர் ஒருவர் கூறுகையில், “வணக்கம்.. நான் திருப்பதியில் இருந்து வர்ரேன். இரவு 8 மணி முதலே காத்திருக்கேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், நான் வந்திருக்கேன் என்றால், தல தோனி இது கடை ஐபிஎல் போட்டி. அவர் இங்க பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இங்கு நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இந்த மூன்றாவது போட்டியை காண நிச்சயம் தோனி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர எப்படியாவது அடிச்சு புடிச்சு பாத்திட வேண்டும்னு வந்திருக்கேன். ஆன்லைனில் டிக்கெட் விற்பனை 7 நிமிடங்களில் முடிந்துவிட்டது” என்றார்.
”நேற்றிரவு 11 மணி முதல் காத்திருக்கிறேன்”
திருவள்ளூரில் இருந்து வந்திருந்த ரசிகர் ஒருவர், “இரவு 11 மணி வந்தோம். எப்படியாவது டிக்கெட் வாங்கிடணும். இந்தியாவுக்காக வந்திருக்கோம். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியை காண வந்திருந்தோம். தற்போது இந்திய அணியின் விளையாட்டை பார்க்க வந்துள்ளோம்” என்றார்.
”டிக்கெ விற்பனையை காலையிலேயே தொடங்கணும்”
மற்றொரு ரசிகர், “நீண்ட நேரம் காத்திருக்கிறோம். டிக்கெட் விற்பனை முறையை மாற்ற வேண்டும். காலை 8 மணி முதலே விற்பனையை தொடங்க வேண்டும். அத்துடன், உணவு ஏற்பாடும் செய்ய வேண்டும். நீண்ட வரிசையில் நிற்கிறோம். இடவசதி இல்லை.” என்றார்.
“போட்டியை காண ஆர்வமுடன் இருக்கிறேன்”
”நான் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறேன். 2019க்கு பிறகு இப்பொழுதுதான் கிரிக்கெட் போட்டியை காண வந்திருக்கிறேன். போட்டியை காண ஆவலுடன் இருக்கிறேன். 12 மணி நேரமாக டிக்கெட் வாங்க காத்திருக்கிறேன். நேற்றிரவு 9 மணிக்கு வந்தேன்” என்கிறார் மற்றொரு ரசிகர்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM