மதுரையில் 3 மாத பெண் குழந்தையை கடத்திய 2 மணி நேரத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சையது அலி பாத்திமா தனது கணவர் ஹரிஷ் குமார் மற்றும் 3 மாத பெண் குழந்தை ஷாலினியுடன் திண்டுக்கல் செல்வதற்காக மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் 3 மாத குழந்தை ஷாலினியை தூக்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த குழந்தை மாயமானதைக் கண்டு கூச்சலிட்டார். இது குறித்து தகவல் அறிந்த வந்த திலகர் திடல் ஆய்வளர் சங்கர் தலைமையிலான போலீசார் ரயில்வே காவல் துறையினருடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காளவாசல் அருகே குழந்தையை கடத்திச் சென்ற மேலூரை சேர்ந்த 35 வயதான போஸ் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தார். இதனையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், கடத்தலுக்கு உதவியாக இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கலைவாணி உட்பட இருவரை கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை ரயில்வே நிலையத்தில் தொலைந்த குழந்தையை காவல துறையினர் துரிதமாகச் செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தது பாராட்டை பெற்றுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM