நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் சொத்து பிரச்னை தொடர்பாக தாயும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி நேற்று தீக்குளிக்க முயன்றனர். நெல்லை கலெக் டர் அலுவலக வாயி லில் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இச்சம்பவங்களை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்பவர்களை போலீசார் விசாரணை, சோதனை நடத்தியே அனுப்பி வருகின்றனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்குள், தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தப்பட்டு அதற்காக புதிய திட்டங்களும் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்றும் நெல்லை கலெக்டர் அலுவலக வாயிலில் சொத்து பிரச்னை தொடர்பாக தாயும், மகளும் திடீரென்று தீக்குளிக்க முயன்றனர். பாளையங்கோட்டை திருத்து பகுதியைச் சேர்ந்த கருத்தையா மனைவி இசக்கியம்மாள் (65). செட்டிகுளம் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகள் வெயிலாட்சி (35). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப தகராறு காரணமாக வெயிலாட்சி தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இசக்கியம்மாள், வெயிலாட்சி மற்றும் வெயிலாட்சியின் குழந்தைகள் சுவாதி நாச்சியார் (9), ஈஷாந்த் (6) ஆகியோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக வாசலுக்கு வந்தனர்.
அங்குள்ள கரும்புச் சாறு கடை முன்பு நின்று இசக்கியம்மாளும், வெயிலாட்சியும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பக்கத்து இளநீர் கடைக்காரர் ஓடோடி வந்து அவர்கள் கையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் தீப்பெட்டியை பறித்து வீசினர். தகவலறிந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி 2 பேரையும் ஆசுவாசப்படுத்தி, அழைத்துச் சென்று விசாரித்ததில் குடும்ப சொத்துப் பிரச்னையில் இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் தாயும், மகளும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் இருவரும் புதுமனை அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில், நேற்று பள்ளி சீருடையோடு மனு அளிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.
பேரிகார்டு மூலம் அடைப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே யாரும் மண்ணெண்ணெய் கேனோடு சென்று விடக்கூடாது என பாதுகாப்பு போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்திய நிலையில், கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று தாயும், மகளும் தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் வடக்கு பக்கமாக அன்பு சுவர் தாண்டியும், தெற்கு பக்கமாக சிறிது தூரமும் பேரி கார்டுகள் மூலம் அடைத்து அங்கும் காவலுக்கு போலீசாரை நிறுத்தினர்.