தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று மோடி, அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக கார சார கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜகவிலிருந்து அண்னாமலையுடனான மோதலால் அவரை கடுமையாக விமர்சித்துவிட்டு வெளியேறியவர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்ததால் அண்ணாமலை தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை பாஜகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை வெளிப்படையாக பொது மேடைகளில் விமர்சித்துப் பேசினர். பாஜக தரப்பிலிருந்தும் அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினர்.
இதனால் அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி தொடர்வதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக ஒரு தகவல் வெளியானது. அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் கட்சியின் தலைவராக அல்லாமல் தொண்டனாக தேர்தல் பணியாற்றுவேன், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறியதாக சொல்கிறார்கள்.
இந்த தகவல் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்ப அலைகளை உருவாக்கியுள்ளது. டெல்லி பாஜக கூட்டணி விஷயத்தில் என்ன முடிவெடுக்க உள்ளது என்பது முக்கியம்.
இந்நிலையில் டெல்லியில் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.