அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமை உருவாக்கியது தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதன் படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக நாளை காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக, திருச்சியில் ஏப்ரல் 2 வது வாரத்தில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறும் என்றும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவில் பொதுவாக கழக அமைப்பு ரீதியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பது வழக்கம். அதற்கு உறுப்பினர் அட்டை, படிவம் உள்ளிட்டவை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் எந்த விதியும் முறையாக பின்பற்றப்படாமல், பிக் பாக்கெட் அடிப்பது போல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் பொதுக்குழு கூட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றார்.