பாட்னா: தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் பரப்பிய விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் காவல்துறையின் எக்னாமிக் குற்றப்பிரிவு (EOU), தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படுவதாகவும் மற்றும் தாக்கப்படுவதாகவும் போன்ற போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் “ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் காஷ்யப்” மீது மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் மணிஷ் காஷ்யப்பிற்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளையும் EOU முடக்கியது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் சரணடைந்தார்
EOU வெளியிட்ட அறிக்கையில், பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்களே தாக்கப்பட்டிருப்பதாக பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பிய மணிஷ் காஷ்யப், சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வீடியோ பரப்பிய ஆர்.எஸ்.எஸ். மணீஷ்
பாட்னா மற்றும் சம்பாரண் காவல்துறை இணைந்து EOU ஆல் அமைக்கப்பட்ட ஆறு குழுக்கள் வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்கள் மற்றும் அவரது இருப்பிடங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். கைது மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் காஷ்யப் சனிக்கிழமையன்று பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
FIR பதிவு செய்யப்பட்டது
EOU குழு மார்ச் 6 அன்று இந்த போலி செய்தி வழக்கு தொடர்பாக தனது முதல் FIR பதிவு செய்து மணிஷ் காஷ்யப் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
அதன் பிறகு போலி வீடியோ விவகாரம் தொடர்பாக ராகேஷ் ரஞ்சன்குமார் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அமன்குமார், ராகேஷ் திவாரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மணீஷ் காஷ்யப்பும் சரணடைந்துள்ளார்.
யார் இந்த RSS மணீஷ் காஷ்யப்
போலி வீடியோக்களை வெளியிட்டவர்களில் மிக முக்கிய குற்றவாளியான மணீஷ் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்று அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருக்கும் மணீஷ்ஷின் போட்டோக்களையும் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். மணிஷ்.
போலி வீடியோக்கள்
பீகார் காவல்துறையின் (தலைமையகம்) கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஜே.எஸ்.கங்வார் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் தாக்கப்பட்டு கொல்லப்படுவதாக 30 போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, தொழிலாளர்கள் மத்தியில் பீதியை பரப்பியதாக EOU விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
வடமாநிலத்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்
முன்னதாக, பீகார் அரசும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளை ஒருங்கிணைக்க 4 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவை தமிழகத்துக்கு அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. இதில் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் சந்தோசமாகவும், எந்த பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்புடன் நன்றாக இருப்பதாகவும் தெரியவந்தது.