வெலிங்டன்,
நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள கூடியது. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது.
இதனால், நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த வியாழ கிழமை கூட, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.