ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு பலாத்காரம், மின் அதிர்ச்சி, கடுமையான சித்ரவதைகள்… அதிர்ச்சி தகவல்

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ந்தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மாத கணக்கில் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது.

அதேவேளை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அதில் சிலருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையையும்நிறைவேற்றி உள்ளது.

அவர்களில் பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிறுவர், சிறுமிகளிடம் இருந்து உண்மைகளை வரவழைக்கிறோம் என்று கூறி, கொடூர சித்ரவதைகள் நடந்து வருகின்றன என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இதன்படி, ராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட 12 வயது உடைய சிறார்கள் முதற்கொண்டு இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் மீது ஈரான் உளவு அமைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அடித்து, துன்புறுத்துதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் வன்முறைகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.

ஈரானின் புரட்சிகர படைகளும் மற்றும் பசிஜ் என்ற துணை ராணுவ படையினரும் கூட இந்த சித்ரவதை செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இவர்களில் 2 வழக்கறிஞர்கள் மற்றும் 17 வயதுக்கு வந்தோர்கள் என நேரடி சாட்சியாக உள்ள 19 பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் சித்ரவதை பற்றிய பரவலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன என அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்களில், 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் வெளிவந்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதனை மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.