திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய முகநூலில் சில பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதில், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த விஜேஷ் பிள்ளை என்பவர் என்னை பெங்களூருவில் வைத்து சந்தித்தார். அப்போது, கேரள மாநில சிபிஎம் செயலாளர் கோவிந்தன் கூறியதன்படி தான் வந்திருப்பதாகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைத்தால் ₹30 கோடி பணம் தருவதாகவும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மிரட்டினார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இது தொடர்பாக கர்நாடக டிஜிபிடம் சொப்னா புகார் அளித்தார். இதையடுத்து விஜேஷ் பிள்ளை மீது வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீசார், நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சொப்னா மற்றும் விஜேஷ் பிள்ளைக்கு எதிராக, கண்ணூர் தளிப்பரம்பு சிபிஎம் செயலாளர் சந்தோஷ் தளிப்பரம்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்த சொப்னா மற்றும் விஜேஷ் பிள்ளை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இருவர் மீதும் சதி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.