சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதமானது என்று முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தேர்தல் ஆணையர்களளாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரில் அதிமுக சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்த சட்ட விரோதமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, கட்சியின் அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-1ன் படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியின் முழு நிர்வாகத்திற்கும் பொறுப்பு ஆவார்கள். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலைப் பெறாமல், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்து ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக, அதிமுக லெட்டர் ஹெட்டில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதிமுக கட்சி பொறுப்புகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏதாவது கடிதம் கொடுக்கப்பட்டால், மேற்கூறியுள்ள தகவல்களை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.