சென்னையை அடுத்த குன்றத்தூர் காவல் நிலையத்தில், தன்னுடைய மகளைக் காணவில்லை என அவரின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண், அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். மாணவியின் தோழிகளிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது மாணவி, சந்தோஷ்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக சந்தோஷ்குமாரின் செல்போன் நம்பரைச் சேகரித்த போலீஸார் அவரின் சிக்னலை ஆய்வுசெய்தனர். ஆனால், சந்தோஷ்குமாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால், அவரைக் கண்டறிய முடியவில்லை.
இந்தச் சூழலில் சந்தோஷ்குமாரின் செல்போன் சிக்னல் குன்றத்தூர் முருகன் கோயிலில் காட்டியது. உடனடியாக அங்கு சென்றபோது சந்தோஷ்குமாருடன் காணாமல்போன மாணவியும் இருந்தார். மாணவி, கழுத்தில் தாலி அணிந்திருந்தார். அதனால் மாணவியிடம் விசாரித்தபோது, `நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த மூன்று மாதங்களாகப் பழகிவந்தோம். காதலர் தினத்தன்று நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தோம். அதன் பிறகுதான் கோயிலில் வைத்து சந்தோஷ்குமார் எனக்குத் தாலி கட்டினார். இருவரும் குடும்பம் நடத்திவருகிறோம்’ என்று கூறினார். அதன்பேரில் குன்றத்தூர் போலீஸார் இருவரையும் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவி அளித்த தகவலின்படி சந்தோஷ்குமாரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிக்கு போலீஸார் கவுன்சலிங் அளித்திருக்கின்றனர்.