புதுடெல்லி: சஹாரா குழும நிதி முறைகேடு வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக, செபி கணக்கில் சஹாரா குழுமம் செலுத்தியுள்ள ரூ.24,000 கோடியிலிருந்து ரூ.5,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுஉச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
சஹாரா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் ஆகிய இரு நிறுவனங்கள் நிதி திரட்டலில் விதிமுறைகளை மீறியது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவ்விரு நிறுவனங்களும், மக்களிடமிருந்து பெற்ற முதலீட்டை திருப்பி வழங்க வேண்டும் என்று 2012-ல் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இரு நிறுவனங்கள் வட்டியோடு செபி கணக்கில் ரூ.24,000 கோடி செலுத்தின. இந்தத் தொகையிலிருந்து ரூ.138 கோடி மட்டுமே திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சஹாரா நிறுவனங்களில் முதலீடு செய்தமக்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க இந்தக் கணக்கிலிருந்து ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.