ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மயிலாடிக்காடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பவித்ரா (21). புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது சித்தப்பா முறையுள்ள கருப்பையாவின் மகன் துரைக்கண்ணு (36), பவித்ராவை ஒருதலையாக காதலித்துள்ளார். இதுபற்றி பன்னீர்செல்வம் புகாரின்படி ஆலங்குடி போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் மாணவி அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து அங்கு சென்ற துரைக்கண்ணு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அவருக்கு கட்டாய தாலிகட்ட முயற்சித்துள்ளார். அதை தடுத்து பவித்ரா கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துரைக்கண்ணு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா துடிதுடித்து இறந்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்ற துரைக்கண்ணு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.