மும்பை: இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. தற்போது மிக அதிக விளைச்சல் காரணமாக வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், வெங்காய விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி 200 கிலோ மீட்டருக்கு பேரணி மேற்கொள்ளத் தொடங்கினர். அந்தப் பேரணி மும்பையை நாளை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குவிண்டாலுக்கு ரூ.600 உதவித் தொகை, நபார்டு மூலம் குவிண்டாலை ரூ.2000-க்கு கொள்முதல், வெங்காயத்துக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், விளைச்சல் பாதிக்கப்பட்டால் இழப்பீடு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
இந்தச் சூழலில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக நேற்று அறிவித்தனர்.