பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய மனீஷ் காஷ்யப் பீகார் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோக்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது போலி வீடியோ என்றும் வடமாநில தொழிலாளர்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கடந்த 6ம் தேதி மனீஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்கை பதிவு செய்தது. தமிழகதக்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மனீஷ் தலைமறைவானார். மனீஷ் காஷ்யப் மீது மட்டும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது 4வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மனீஷ் காஷ்யபை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜகதீஷ்பூர் காவல்நிலையத்தில் நேற்று மனீஷ் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காஷ்யப் பிரபல யூடியூபர் ஆவார்.