அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. வரும் மார்ச் 26ஆம் தேதி பொதுச் செயலாளர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகி உரிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த 18ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் ஆளாய்
புறப்பட்டார். தனது ஆதரவாளர்கள் படையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்து அதிகாரமிக்க ஒற்றை நாற்காலிக்கு அச்சாரம் போட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்
இவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வர வாய்ப்பில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி தான் கழக பொதுச் செயலாளர் என அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஜூலை 11, 2022 பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சட்டப் போராட்டம்
அதன்பிறகு தான் எடப்பாடி பழனிசாமி,
இடையில் சட்டப் போராட்டங்கள் தொடங்கின. கடைசியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனக் கூறப்பட்டது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி முடிவெடுக்க முடியாது. இதுபற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தை கைகாட்டியது.
பொதுக்குழு முடிவுகள்
இதற்கிடையில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி காலாவதியானது. இந்த சூழலில் அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்ட, எடப்பாடி தரப்பு உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலிக்கு அடிபோட்டது. அதன் விளைவு தான் பொதுச் செயலாளர் தேர்தல். இதில் வெற்றி பெற்று விட்டால் கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழு தீர்மானங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.
எடப்பாடிக்கு சிக்கல்
பொதுச் செயலாளராக ஆனதும் புதிதாக நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் இன்னும் அமலில் இருக்கின்றன. அப்படி பார்த்தால் ஒருங்கிணைப்பாளரை கேட்காமல் தேர்தல் நடத்த முடியுமா?
ஓபிஎஸ் கடிதம்
இதையொட்டி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. ஏனெனில் ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதற்குள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது.
என்ன நடக்கும்?
அதிமுக ஒருங்கிணைப்பாளராக தன்னிடம் ஆலோசனை நடத்தாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தல் அறிவிப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுமா? இல்லை சிக்கல் வருமா? மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி கைவிடுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.