உலகளவில் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு வழிப்படுத்திவிட்டே தணிந்திருந்தது. ஆனால் அதன் உருமாற்ற வகை கொண்ட ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகளால் இதுகாறும் தொற்று கணக்குகள் பதிவாகிக் கொண்டே இருந்தாலும் பெரிதளவிலான பாதிப்புகள் இல்லாமலேயே இருந்தன.
இதனூடே H3N2 என்ற புதுவகை இன்ஃப்ளூயன்சா நோய் பரவல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பரவத் தொடங்கி இருப்பதால் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அவதியுறும் நோயாளிகள் குவிவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் நாட்டில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
அதன்படி 126 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800-ஐ கடந்திருக்கிறது. மார்ச் 17ம் தேதியன்று நாடு முழுவதும் 843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 526 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 135 பேருக்கும், குஜராத்தில் 134 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 329 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
இதுவரை ஓரிலக்கத்தில் மட்டுமே பதிவாகி வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று ஒரே நாளில் சென்னை மற்றும் கோவையில் அதிகபட்சமாக 13 மற்றும் 20 முறையே பதிவாகியிருக்கிறது.
அடுத்தபடியாக சேலத்தில் 4, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா 3, நெல்லை, திருப்பூர், நாமக்கல், குமரியில் தலா 2, திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், விமான நிலைய பரிசோதனையில் 7 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று பதிவானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதன்படி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவும், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கோவையில் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்றும் பரவுவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM