அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்,
– ஓ.பன்னீர்செல்வம் இடையிலான சட்டப் போராட்டம் என அனல் பறக்கும் அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான கூட்டணி நிலைப்பாட்டை முன்னெடுத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை ராஜினாமா
இது பாஜகவில் மட்டுமல்ல, அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா? இல்லை கூட்டணி தொடருமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. முதலில் இந்த கூட்டணியால் யாருக்கு என்ன லாபம்? என்ற எண்ணமும் எழுகிறது. அண்ணாமலையை பொறுத்தவரை அதிகபட்சம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அவரது தலைவர் பதவி நீடிக்கலாம்.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி வேண்டாம் என்றால் அதுபற்றி அவர் கருத்து கூறலாம். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமை தான். தேசிய கட்சியான பாஜகவில் மாநில தலைமை எப்போதும் முடிவெடுக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டணி பற்றியும், ராஜினாமா செய்வேன் எனவும் அண்ணாமலை பேசியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பதில்
இந்த இடத்தில் அண்ணாமலைக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தது சரியே என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் திராவிட கட்சியான அதிமுகவிற்கு தான் மவுசு அதிகம் என்ற பிம்பம் நீடிக்கிறது. இத்தகைய நிலையில் அண்ணாமலையின் பேச்சால் அதிமுக பலவீனமடைந்து போய்விட்டதா? அதிமுகவிற்கு பாஜகவின் கூட்டணி அவசியம் தானா? போன்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
பின்னணி காரணம்
இதன் பின்னணியில் தற்போது இருக்கும் ஒரே அரசியல் கணக்கு அதிமுக பொதுச் செயலாளர் பதவி தான். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அவசியம். என்ன தான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கினாலும், கட்சிக்குள் தேர்தல் நடத்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது.
தேர்தல் ஆணையம் முடிவு
அதற்கென்று தனியாக விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படியே ஆணையம் செயல்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கைகூடி வர வேண்டும் என்றால் டெல்லி அதிகார மட்டத்தின் தயவு தேவை. இப்படி சுற்றி சுற்றி ஒரு அரசியல் வலைப் பின்னல் இருப்பதால் பாஜக கூட்டணி தேவை என்றே எடப்பாடி பழனிசாமி நினைப்பார்.
தற்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாஜகவில் மாறி மாறி உரசல் போக்கு நீடித்து வந்தாலும் 2024 மக்களவை தேர்தல் வரை கூட்டணிக்கு பங்கம் வராது எனப் பலரும் கூறுகின்றனர்.