யூடியூபரான பிரின்ஸ் தீட்சித் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகையில் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் டெல்லியில் உள்ள மங்கோல்புரி மேம்பாலம் அருகே ஒரு ஆண் பெண் ஒருவரை அடித்து காரில் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்து விசாரித்ததில் அந்த கார் குருகிராமில் உள்ள ரத்தன் விஹாரில் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். பெண்ணை தாக்கிய அந்த ஆண் யார்? எதற்காக தாக்கினார்? அப்பெண்ணை எங்கே அழைத்து சென்றுள்ளார்? என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், டெல்லியில் கடந்த மார்ச் 17ஆம் தேதி, போக்குவரத்து விதிகளை மீறி சிலர் காரின் மேற்கூரையில் நின்றபடி பயணம் செய்த வீடியோ இணையத்தில் பரவியது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், யூடியூபரான பிரின்ஸ் தீட்சித் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகையில் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யூடியூபர் பிரின்ஸ் தீட்சித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் யூடியூபர் பிரின்ஸ் தீட்சித் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அந்த வீடியோவில், தன்னைப் போன்று யாரும் காரில் சாகசம் செய்யக்கூடாது என்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM