‘அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரன் சகுனியாக உள்ளார்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று காயகல்ப்பம் கம்பெனியாக உள்ள ஓபிஎஸ் தரப்பு பேட்டியளித்தனர். அதில், விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளது வெளிப்படையாகியுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் நிதானத்தில் உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது. பேட்டியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பிக்பாக்கெட் என்று விமர்சித்துள்ளார், பிக்பாக்கெட் என்று சொல்வதற்கு பொறுத்தமானவர் ஓபிஎஸ் தான். எம்ஜிஆர் மாளிகையை சூறையாடியது பிக்பாக்கெட் இல்லையா?; அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி துறை, தன்னிடம் இருந்த நிதித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறையை ஒற்றை காலில் இருந்து பிடுங்கியவர் ஓபிஎஸ். பதவி வெறி பிடித்தவராக இருந்தவர் ஓபிஎஸ் தான்.
தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் வெளியில் தெரிந்திருக்க மாட்டார். அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்தபொழுது, ஜெயலலிதாவிற்கு எதிராக தேர்தல் ஏஜென்ட்டாக வேலை பார்த்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி, சசிகலா குடும்பத்தையே தரக்குறைவாக பேசியவர் ஓபிஎஸ் தான். பின்னர், ஜெயலலிதா அமைத்து கொடுத்த அரசை கலைக்க வேண்டும் என நினைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். மீண்டும் கட்சியில் இணைத்தபொழுது ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும், சந்தேகம் உள்ளது’ என கூறியது அவர் தான். ஆனால் ஒருமுறை கூட விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல், கடைசியாக சென்று, ‘சந்தேகமில்லை, சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை உள்ளது’ என மாற்றி கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு, 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தோம். ஆனால் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ்ஸால் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தனது மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்தார். தேனி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு தேர்தலில் ஓபிஎஸ் மட்டும் வெற்றி பெறுகிறார். வேறு யாரையும் வெற்றி பெற வைக்கவில்லை, இபிஎஸ் முதல்வராக கூடாது என செயல்பட்டார்.
பண்ருட்டி ராமசந்திரன் சென்ற கட்சிகள் எதும் உருப்படியாகவில்லை. ஓபிஎஸ்ஸிடம் எவ்வளவு பணம் பெற்றார் என்று தெரியவில்லை. ஓபிஎஸ்ஸிடம் வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக செயல்படுகிறார். அரசியலில் சகுனி பண்ருட்டி ராமச்சந்திரன் தான். சமுத்திரம் போல அதிமுக உள்ளது. ஆனால் கூவம் போன்றவர்கள் பேசுவதால் கூவமும் சமுத்திரமும் ஒன்றாகி விடுமா?. அதிமுக பெயரை சொல்வதற்கு தகுதி இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா யாரை தீயசக்தி என நினைத்தார்களோ அவர்களை இல்லத்தில் அழைத்து பேசியுள்ளார். திமுக தலைவரும், அவரது மகன் உதயநிதியும் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்து கை குழுக்கி பேசுகின்றனர். சிரித்துக்கொண்டு உள்ளனர். இதுதான் துக்கம் விசாரிப்பதற்கான நாகரீகமா?. இதில் இருந்தே தெரிகிறது, திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.
எத்தனை நாட்கள் தான் கட்சிக்கு தலைமை இல்லாமல் நடத்துவது?. அதனால் தான் தற்பொழுது பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் குறித்து கட்சி நடவடிக்கை எடுக்கும். ஒரு குடும்பத்திற்கு ரூ. 20,000 வீதம் ரூ. 350 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. விடியாத திமுக அரசால் எங்களுடைய அடிப்படையான வாக்கு வங்கி சிதையவில்லை அப்படியே உள்ளது. இடைத்தேர்தலை வைத்து பொது தேர்தலை கணிக்க முடியாது. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வராது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40/40 வெல்வோம். ‘கோடநாடு கோடநாடு என்று சொல்லி சீன் போடும் வேலையெல்லாம் வேண்டாம்; அதற்கு எல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்லை’ என எடப்பாடியே சொல்லிவிட்டார். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும்” எனக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM