மெக்ஸிகோவின் அதிபர் Andrés Manuel López Obrador, மருந்துகள் ஓவர்டோஸ் இறப்புகள் பற்றிப் பேசும்போது, `மக்களிடையே கட்டிப் பிடிக்கும் வழக்கம் குறைந்துவிட்டதால், இது போன்ற பிரச்னைகள் வருகின்றன’ எனக் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
2023-ம் ஆண்டில் பாகிஸ்தானின் முதல் போலியோ தொற்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனுக்கு, போலியோ உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
6.8 புள்ளி ரிக்டர் அளவில் ஈகுவடார் நாட்டில் நிலநடுக்கம் பதிவானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கூகுள், மெக்ஸிகன் வேதியியலாளரான மரியோ மோலினாவின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டிருக்கிறது. மரியோ மோலினா, ஓசோன் படலத்தைக் காக்கும் வகையில் பல பங்களிப்புகளைச் செய்து, நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
வட கொரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக 8,00,000 மக்கள் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, தனித்துவமான முறையில் வேலை வாய்ப்புக்கான தேவையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, `ப்ரொஃபெஷனலாக கரடிகளைக் கட்டிப் பிடிப்பவர்கள் வேண்டும்’ என்று அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது, மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
இங்கிலாந்தின் புதிய குடியேற்ற மசோதாவுக்கு எதிராக லண்டனில் கடுமையானப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் இனவெறிக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, போராடி வருகின்றனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில், கிரிமியா பகுதியை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார்.
அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில், கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள மின்னெஸோட்டா (minnesota) அணு ஆயுதக் கிடங்கில், சுமார் நான்கு லட்சம் கேலன்கள் கதிரியக்க நீர் கசிந்தது. நவம்பரிலிருந்து கசிந்து வருவது இப்போதுதான் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.