அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? டோட்டலா மாறிய பேச்சு… இறுதி முடிவு இதுதானாம்!

தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தலைவர் அண்ணாமலை,
‘அதிமுக உடனான கூட்டணி நிலைப்பாட்டை முன்னெடுத்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தொண்டனாக பணியாற்றுவேன்’
எனக் கூறியதாக தகவல் வெளியானது. இது கடந்த இரண்டு நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு க்ளீன் பாலிடிக்ஸ் தேவை. அதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

க்ளீன் பாலிடிக்ஸ்

அந்த க்ளீன் பாலிடிக்ஸ் என்பது பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது. தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதேபோல் அரசியல் யுக்திகளும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எங்கள் தலைவர்கள் உடன் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சிக்கும் எதிரான நான் இல்லை. அவரவர் கட்சிகளுக்கு எது சரியானது என நினைக்கிறார்களோ? அப்படி செய்கிறார்கள்.

கூட்டணி அதிகாரம்

அவர்களின் அரசியல் சரியில்லை என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. அவர்கள் இந்த மாதிரி அரசியல் செய்யக் கூடாது, அந்த மாதிரி செய்ய வேண்டும் எனக் கூறும் அதிகாரமும் எனக்கு கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக பாஜக மாநிலத் தலைவராக எனது பயணத்தில் ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்திருக்கிறேன். தமிழ்நாடு மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த கட்சி உடன் கூட்டணி, அந்த கட்சி உடன் கூட்டணி என பேசுகின்ற ஆள் நான் கிடையாது. அந்த அதிகாரமும் எனக்கு கிடையாது. அதற்கு நேரம் வரும்.

தமிழ்நாடு அரசியல்

அப்போது கண்டிப்பாக பேசுகிறேன். பணமில்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் மாற்றம் என்பது 1,000 ஆண்டுகள் ஆனாலும் வராது என்ற எண்ண ஓட்டத்திற்கு வந்துள்ளேன். இதுபற்றி எனது கட்சியினருடன் பேச ஆரம்பித்துள்ளேன். வருகின்ற காலங்களில் இன்னும் ஆக்ரோஷமாக பேசத் தான் போகிறேன். கூட்டணியை பற்றி அதற்கான நேரம் வரும் போது, எங்களின் தலைவர்கள் சொல்வார்கள். எந்த கட்சிக்கும் நான் எதிரி கிடையாது. எந்த தலைவருக்கு எதிரி கிடையாது. நேரம் வரும் போது நான் பேசுகிறேன்.

இறுதி முடிவு

நேர்மையான அரசியல் பாதையில் தான் பயணிப்பேன். அதில் உறுதியாக இருக்கிறேன். நானும் என்னை மாற்றி கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக் கொண்டு தான் இருக்க வேண்டுமெனில், அப்படிப்பட்ட அரசியலே எனக்கு தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். நான் ஒரு சிறிய மனிதன். எந்த ஒரு கட்சியை பற்றியும் குறை சொல்வதற்கு எனக்கு அதிகாரமில்லை. தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது. எனவே நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

மக்கள் மன்றத்தில்…

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக என்னால் எதை செய்ய முடியும். எதை செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டேன். நேரம் வரும் போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் மக்கள் மன்றத்தில் வைக்கிறேன். கட்சியின் கருத்தையும் மக்கள் மன்றத்தில் வைக்கிறேன் என்று தெரிவித்தார். அண்ணாமலையின் பேச்சில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. வழக்கமாக திராவிடக் கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பார். அதிமுகவை வம்புக்கு இழுப்பார்.

குட்டு வைத்த டெல்லி

பணத்தை வாரி இறைத்து வாக்குகளை கவரும் கட்சிகள் என திமுகவை குற்றம்சாட்டுவார். இவை எதுவும் இன்றைய பேச்சில் வெளிப்படவில்லை. இதன்மூலம் டெல்லி தலைமை சில சீரியஸான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கும் எனத் தெரிகிறது. அதிமுக உடனான கூட்டணியின் அவசியத்தையும், திமுக உடனான இணக்கமான போக்கின் ரகசியத்தையும் நேரடி மெசேஜாக அண்ணாமலைக்கு தெரியப்படுத்தி இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.