திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்; இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 1 நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்ததன் விளைவாகவே தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் நாசா மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மீண்டும் நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம் பகுதியில் விண்வெளி ஏவுதளம் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினம் பகுதியில் விண்வெளி ஏவுதளம் கண்டிப்பாக அமையும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை போன்று எரிகலன் மறு பயன்பாடு செய்வதற்கான திட்டங்கள் இரண்டு முறை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இது வருகின்ற ககன்யான் திட்டத்தில் ஆளில்லாமல் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
செயலிழந்த செயற்கைக்கோளை பூமிக்கு திரும்ப பெற்றதன் மூலம் விண்வெளி குப்பைகளை இந்தியா உருவாக்காது என உலக நாடுகளுக்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தாளாளர் ஜனகமாலா மற்றும் முதல்வர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து அசத்தியது. இதனால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தது. இஸ்ரோவின் கணிப்புபடி, சந்திரயான் 1 விண்கலம், சுமார் 2 ஆண்டுகள் உழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2009 வரையில் மட்டுமே சந்திராயான் 1 இயங்கியது. அதன்பின், அதன் ஆயுட்காலம் முடித்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் 95% ஆய்வுப்பணிகள் வெற்றியடைந்தது. இதனால் சந்திரயான் 1 விண்கலம் வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டது.