மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில், வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி, பேராசிரியர் அழகர்சாமி, கலைப்பண்பாட்டு ஆய்வாளர் காந்திராஜன், ஆர்வலர் அருண் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது மேட்டுக்காடு பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகில் 9-ம் நூற்றாண்டு பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பாவெல்பாரதி கூறியதாவது: ”இங்கு கிடைத்த கற்செக்கு 32 அங்குலம் வெளிவிட்டம், 23 அங்குலம் உள் விட்டம், 14 அங்குலம் ஆழம் கொண்டது. கற்செக்கு உரலின் வட்டமான மேல் விளிம்பில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தொல்லியலாளர்கள் சொ.சாந்தலிங்கம், சு.ராஜகோபால் உதவியோடு வாசித்ததில், ‘ஸ்ரீ குடிகம் நல்லூரார் இடுவிச்ச கற் செக்கு பட்டசாலியன் உ’ என பொறிக்கப்பட்டுள்ளது.
முற்காலப் பாண்டியர் காலத்தில் கோயில்களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தேவதான கிராமங்களும், பிராமணர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களும் நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் 9, 10-ம் நூற்றாண்டுகளில் இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட இப்பகுதி குடிகம் நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியகட்டளை என அழைக்கப்படுகிறது.
மேலும் வழக்கமாகக் கல் செக்குகள் உரல் வடிவில் இருக்கும். ஆனால் இங்கு தொட்டி போன்ற வடிவில் உள்ளது. இதில் எண்ணெய் வெளியேற துவாரம் இருக்கிறது. எண்ணெய் வித்துக்களை ஆட்டுவதற்கு ஊருக்கு பொதுவாக கல்செக்கு செய்து தருவது அறச்செயலாகக் கருதப்பட்டுள்ளது” என்றார்.